Sunday, March 14, 2010

வீட்டைத் தாண்டி வருவாயா










நேற்று இரண்டாம் ஆட்டம் சத்யத்தில் வி.தா.வருவாயவுக்கு நான் குடும்பசகிதம் சென்றிருந்தபோது குஷ்பூவும் தன் நண்பிகளுடன் வந்திருந்தார். "ஏ குஷ்பூ...", "குஷ்பூ பாருங்க அங்க ...", "ஐ குஸ்பூ..." என்ற பலவித ஆச்சரிய  வாசகங்கள் தன்னை சூழ வலம்  வந்த குஷ்பூ, வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட்டில் ஜெயா டி.வி யின் ஜாக்பாட்டில்  வருவதுபோலின்றி வெள்ளை சுடிதாரில் வந்திருந்தார். அவருடைய ரோ 'C' என்னுடையது 'I', ஏணி வைத்தாலும் எட்டாது. ரோ மாறியதில் எனக்கு சற்று வருத்தம்தான். நாம் குஷ்பூ பார்க்க வரவில்லையென்றும் படம் பார்க்கத் தான் வந்தோம் என்றும்  எனதருமை தர்மபத்தினி  செல்லமாக(?) பின் தலையில் தட்டி உணர்த்தினார்.

வீட்டைத் தாண்டி வருவாயா என்பதின் கவித்துவமான தலைப்பு தான்  விண்ணைத்  தாண்டி வருவாயா. பொறியியல் முடித்து Film Maker ஆகத்துடிக்கும் கார்த்திக். எம். சி. ஏ படித்து போலாரிஸ் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெஸ்ஸி. கார்த்திக் வீர வேளாளர், ஜெஸ்ஸி கேரள கிறிஸ்டியன். ஜெஸ்ஸியின் வீட்டில் குடியிருக்கும் கார்த்திக்கும், மாடி போர்ஷனில் வசிக்கும் ஜெஸ்ஸிக்கும் மலர்ந்த காதல், ஜெஸ்ஸியின் ஆறடி மூன்றங்குல அப்பாவின் சம்மதத்தோடு கல்யாணம் நடக்குமா அல்லது காதல் படுக்குமா என்பதுதான் கதை. கார்த்திக்காக அடக்கமான சிம்பு, ஜெஸ்ஸியாக அமைதியான த்ரிஷா. ஏனோ த்ரிஷா முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை.

படத்திலும் நிஜத்திலும் த்ரிஷா சிம்புவைவிட வயதில் பெரியவர் போலத்தான் இருக்கிறார். தன் தங்கை "அவ மூணு வருஷம் பி.எஸ்.ஸி மேத்ஸ் படிச்சிட்டு எம்.சி.ஏ, அதனால உன்னைவிட  ஒரு வயசு கூட.... உனக்கு 22  அவளுக்கு 23 " என்று சொல்லும் போதும், "உங்கப்பா உனக்கு 50 வயசு ஆகும்போது சம்மதிப்பாரா.. அப்ப எனக்கு 49 ஆகும்" என்று த்ரிஷாவிடம் சீரும் போதும், ரயிலில் தன்னை கிஸ் செய்த சிம்புவை கோபிக்கும் த்ரிஷாவிடம் "எனக்கு 80 வயசானாலும் இப்படி தான், அப்ப உனக்கு 81 இருக்கும்" என்று சொல்லும் போதும் சிம்புவிடம் ஓரளவாவது கௌதம் வாசுதேவ் மேனன் வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. 

"கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் " என்று கை வித்தை செய்து வந்த சிம்புவை மிகவும் அடக்கமாக,ஆரவாரம் இல்லாத கல்லூரி முடித்த இளைஞனாக காட்ட கௌ.வா.மேனன் எடுத்திருக்கும் முயற்சிகள் அபாரமானது. இருந்தாலும் சிம்பு கொஞ்சம் கடித்து கடித்து பேசுவதை குறைத்தால் நன்றாக இருக்கும். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே சேலை கட்டி சோலையாக வரும் த்ரிஷா மாடி ஏறும் போது சிம்பு தன்னை பறிகொடுத்து பாடும் "ஹோசோனா..." பாட்டில் ரஹ்மானின் இளமை கொடிகட்டி பறக்கிறது. கலக்கல். சிம்பு தலையில் இருக்கும் தொப்பியை மேல் நோக்கி வீச அது மேலேயிருந்த லாங் ஷாட் காமராவை  மூட அமர்க்களமான சினிமேடோகிராபியின் நாயகன் மனோஜ் பரமஹம்சா.கேரள நீர் நிலைகளிலும், அயல் நாட்டு பாடல் காட்சிகளிலும் காமராவில் அனாயாசமாக படம் பிடித்து புகுந்து விளையாடியிருக்கிறார். கௌ.வா.மேனனின் ரிச்னெஸ் காட்சிக்கு காட்சி 'பளிச்' என்று தெரிகிறது.  

மாடியில் இருக்கும் த்ரிஷாவின் கவனத்தை ஈர்க்க வாசல் கிரில் கேட்டின் தாழ்ப்பாளை  'டிங் டிங்' என்று தட்டி லேசாக தலை தூக்கி பார்க்கும் போதும், வீட்டு வாசலில் கூடைப் பந்து ஆடும் போது தன்னை நெருங்கி மாடி ஏறும் த்ரிஷாவை ஏக்க லுக் விடும் போதும், மாடியில் துணி காய போட போகும் தானும்  எதேச்சையாக மாடி செல்வது போல் சென்று த்ரிஷாவை பார்க்கும் போதும், சிம்பு விடும் 'ஜொள்' தியேட்டரை நனைக்கிறது. சிம்புவுடன் 'காக்க காக்க" காமராமென் கணேஷ் என்று வரும் கணேஷ் ஜனார்தனதின் குரலிலேயே நகைச்சுவை ததும்புகிறது. த்ரிஷாவின் கல்யாணத்திற்கு ஆலப்புழா சர்ச்க்கு செல்லும் இருவரும் யாரும் பார்த்துவிடாமல் இருக்க வேண்டும் என்று தவிக்கும் போது, "தம்பி ... வேணாண்டா... போயிறலாம்...போட்டு பின்னிருவானுங்க..." என்று கரகர குரலில் கலக்குகிறார். 

"ஊர்ல இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய பார்க்கணும்" என்று சிம்புவும், கேரளாவில் த்ரிஷாவின் உறவினர்களிடம் சண்டையிட்டு  மாட்டிக் கொண்டு  போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் போது கணேஷும் "இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏன் கார்த்தி ஜெஸ்ஸிய லவ் பண்ணனும்" , "ஊர்ல இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏன் என்னை லவ் பண்ணனும்" என்று த்ரிஷா கேட்கும் இடங்களும் அருமை அருமை. ஒவ்வொரு முறையும்  த்ரிஷா தன்னை திரும்பி பார்ப்பார் என்பதை சிம்பு சொல்லும் காட்சிகளும், அதிலும் ஆலப்புழா சர்ச்சில் "இன்னும் பத்து எண்ணி முடிப்பதற்க்குள் ஜெஸ்ஸி என்னை திரும்பி பார்ப்பா.." என்று சிம்பு சொல்ல நான்கு எண்ணி முடிப்பதற்குள் த்ரிஷா பார்பதை மிகவும் ஆர்வத்துடன் நம்மையும் பார்க்க வைக்கிறார் கௌ.வா.மேனன்.

அனைத்து பாடல்களிலும் ரஹ்மானின் இளமை முத்திரை  தெரிகிறது. ஆரோமலே பாடலில் சிம்பு பிலிம் மேக்கர் ஆகி விடுகிறார். மன்னிப்பாயா பாடலில் த்ரிஷா வீட்டு பின்புற கால்வாயில் அந்த இருட்டில், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், "தொலைதூரத்தில் வெளிச்சம் நீ...உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய்...." பாடும் சிம்பு ரஹ்மானுடன் சேர்ந்து ரசிக்க வைக்கிறார். முன் பட டைட்டில்களை கேரள நீர் நிலைகளை கிழித்து போகும் போட்டின் பின்புறத்தில் காண்பிக்கும் போதே இந்த படத்தின் காதல் நீர்த்துப் போய்விடும் என்று டைரக்டர் சொல்லாமல் சொல்வது பின்பு புரிகிறது. காதல் தோல்வியில் தன் கதையை வெற்றி படமாக எடுத்து ஜெஸ்ஸியிடம் போட்டு காண்பிக்கும் கார்த்தியின் பெயரை  பின்பட டைட்டில்லில் தன் பெயராக மாற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய கதையை தான் எடுத்தாரோ என்று சற்று சந்தேகமாக உள்ளது. இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் இழுவைதான் என்று சக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தவன்னம் வெளியேறினார்கள்.
என்னை பொறுத்தவரையில் ஒரு நல்ல காதல் கதையை மிகவும் டீசெண்டாக தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கும்  கௌ.வா.மேனனுக்கு பாராட்டுக்கள். 

3 comments:

siravanan said...

நல்ல ரசனையின் வெளிப்பாடே இந்த விமர்சனம். நன்றி.

Anonymous said...

நல்ல விமரிசனம். ஆனால் இதே விமரிசனத்தை இங்கே http://kalamarudur.blogspot.com/2010/03/blog-post_18.html 18-Mar-2010 பதிவாக வாசித்தேன்.

உங்களுக்கு தெரியுமா?

RVS said...

Thanks Anony for your information.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails