அவன் யார்ரா பெரிய கை. த.ஒ.சீ.க. கட்சியில வட்டமா இருக்கான். மாசம் லட்ச ரூபாய்க்கு கல்லா கட்ராண்டா.....
(த.ஒ.சீ.க = தமிழ்நாடு ஒழுக்க சீலர்கள் கட்சி)
பி.டபிள்யூ.டில இன்ஜீனியரா இருக்கிற பெருமாள் இருபத்தி மூவாயிரம் சம்பளமும் நாப்பத்தி ரெண்டாயிரம் கிம்பளமும் சேர்த்து அருவத்தி அஞ்சாயிரம் மாசம் சம்பாதிக்கிறான். ஹும் எல்லோருக்கும் இந்த தெறமை வருமா....
ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு மேலே தி. நகர் ரெங்கநாதன் தெருவுலேர்ந்து சாமான்லாம் வாங்கிண்டு வராளாம்...
ரேஷன் கடையில ஒரு கிலோ ஜீனிக்கு தொள்ளாயிரம் தான் நிக்கிது...
நித்தியமும் முடிச்சூர் வர்ற பத்து பஸ்ல அஞ்சு பஸ் ஓடாம முடமாயி நின்னுடுது...
நம்ம ஊர்ல ரெண்டும் பக்கத்து ஊர்ல ஒன்னும் வச்சிருக்கான்டா இவன்....
பரிட்சை எளுதின எம்பத்தி நாலு பேருல இருவது பேருதான் பாஸு. பாக்கி எல்லாமே பூட்ட கேஸு....
உன் வண்டியாவது பத்து குடுக்குது. என்னோடது எட்டு மட்டுமே குடுத்து என் உசுரை எடுக்குது.
எதிர்த்த வீட்டு கல்யாணி அந்த குப்பு கூட ஓடி போய்ட்டாளாம்.
இது என்ன ஒரே அக்கபோரா இருக்கு. எப்ப பார்த்தாலும் வம்பு தான் என்று யாராவது சொன்னால் அது தவறு. மேலே கண்ட வாசகங்கள் எல்லாவற்றிலும் இருப்பது தகவல்கள் தான்.முன்பு இதுபோல் முகத்திற்கு முகம் பார்த்து வம்பு தும்பு பேசியவர்கள் இப்போது கூடும் இடம் இணையம். பேசியதோடு மட்டும் இல்லாமல் தான் நேற்று சென்ற பார்ட்டியில் நடந்த கூத்துக்களை படம் பிடித்து நெட்டில் 'பிகாசோ' படத் தொகுப்பில் ஏற்றி விடுகிறார்கள். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை "இங்க ஒரே ஹாட்டா இருக்கு.. அங்க எப்டி?" என்று ஏ.சி ரூமிற்குள்ளிருந்து டுவீட்டுகிறார்கள். ஓர்குட் 'துணுக்கு சேகரப் புத்தகத்தில்' (மன்னிக்கவும் Scrap புக் இன் தமிழாக்கம் ) கிறுக்குகிறார்கள். யூ ட்டுயுபில் கண்டதையும் நல்லதையும் காண்கிறார்கள். யாஹூ, எம்.எஸ்.என்., ஜீடாக், ஸ்கைப் போன்று பல வழிகளில் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள்.....
இப்படி இவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். 2009 ஆரம்பத்தில் மொத்த இணைய போக்குவரத்து 5 எக்ஸா பைட்டுகள் (exa bytes). இது போல் உற்பத்தியாகும் விவரங்களை சேமித்து வைப்பதற்கு இன்னமும் போதுமான அளவு தேக்கங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.
எம். பி, ஜீ.பி தெரியும், இது என்ன எக்ஸா என்போருக்கு ஒரு மேலதிக தகவல், ஜீ.பியிலிருந்து இரண்டு படி தாண்டி மூன்றாவது படியில் உள்ளது எக்ஸா. டெரா (Tera) , பெடா (Peta) அதற்க்கப்புறம் எக்ஸா. இதற்க்கப்புறம் ஜெட்டாவும் (Zetta) யோட்டாவும்(Yotta) உண்டு . கீழே ஒரு சிறிய வாய்ப்பாடு
- b = bit (1 or 0 )
- B = byte ( 8 bit)
- KB = Kilo Byte (1024B)
- MB = Mega Byte (1024KB)
- GB = Giga Byte (1024MB)
- TB = Tera Byte (1024GB)
- PB = Peta Byte (1024TB)
- EB = Exa Byte (1024PB)
- ZB = Zetta Byte (1024EB)
- YB = Yotta Byte (1024ZB)
இதில் மூன்றவதிலிருந்து ஒவ்வொன்றின் 1000 மடங்கு அதன் கீழ் வருவது. அதன் படி ஒரு எக்ஸாவானது 1 EB = 1,000,000,000,000,000,000 B.
டெரா வரைக்கும் பார்த்த நாம் பெடா எங்கு உபயோகப்படும் என்றால் நம்ம கூகிள் அண்ணாச்சி ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெடா பைட்டு தகவல்களை அலசி ஆராய்ந்து நமக்கு தேடி தருகிறது. சென்ற வருடம் முழுவதும் பரிமாற்றம் செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட விவரங்கள் 1.2 ZB. அப்படியென்றால் YB பற்றி நினைப்பதற்குள் "ஏம்பா யாரது? கொஞ்சம் லெமன் போட்டு தண்ணி கொண்டு வா..." என்று கேட்பது புரிகிறது.
இப்போது நாம் மேலே பார்த்த அனைத்தையும் ஒரு நல்ல 'தகவல்' உள்ளம் படைத்தவர் ஒரு 'விவர வரைபட' (Info graphic video) வீடியோவாக தொகுத்ததை மேலே கண்டீர்கள். "இரண்டாயிரத்தி பதிமூணுல நாம பரிமாற்றம் செய்யப்போற தகவல்கள் ......." என்று நான் ஆரம்பிக்கும் போது
"ஏம்பா இதை கேட்க நாதி இல்லையா? ஒரே நம்பர் ஒன் கொடுமையா போச்சே! ......"
"என்ன கொடுமை சரவணன் இது..." என்று சந்திரமுகி பிரபு போலவும் வசனங்கள் என் காதில் விழுகிறது.
2013-ல 667 Exa Bytes அளவிற்கு இணைய போக்குவரத்து இருக்கும் என ஊகிக்க முடிவதாக சிஸ்கோ (Cisco) விலிருந்து வரும் அதிகார பூர்வ செய்திகள் தெரிவிக்கிறது.
"இவ்வளோ சொல்லியும் விஜயகாந்த் படத்துக்கு லியாகத் அலிகான் வசனம் மாதிரி, ஒரு ஊராட்சி ஒன்றியத்துல நாப்பத்தி ரெண்டு சத்துணவுக் கூடம் இருக்கு, ஒன்னுக்கு இருபத்தி ரெண்டு பசங்கன்னா மொத்தமா தொள்ளாயிரத்து இருவத்து நாலு பசங்க சாப்பிடுது......ன்னு சொல்லிகிட்டே போறான்டா. துரத்தி வெட்டுங்கடா ........."
டிஷ்யூம்.... டிஷ்யூம்.... சதக்... சதக்.....
(துரத்தி வெட்டுவது காதில் கேட்கிறது )
Photo Courtesy: http://www.economist.com/
0 comments:
Post a Comment