Wednesday, February 24, 2010

இஷ்டமித்திர பந்துக்கள்

 
முந்தாநாள் அந்தி நேரம் பழமுதிர்சோலையில் முருங்கைக்காய் வாங்க வந்த முரளியுடன்  குடும்பம், குழந்தை குட்டிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்திற்கு ரொம்பவே அங்கலாய்த்துக்கொண்டான். ஒன்றும் பெரியதாக இல்லை, அவனுடைய சித்தப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மருமகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சாப்ட்வேர் துறை தரையில் தலைகுப்புற படுத்திருந்தபோது சொன்னான். "அவளுக்கு வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டதற்கு "எந்த சித்தப்பாவின் மருமகள்?" என்று இருபுருவம் சுருக்கி கேட்டான். அதற்க்கு நான் "உங்க சித்தப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மருமகளைக் கூட மறந்து விட்டியா?" என்றதற்கு தான் அவ்வளவு அங்கலாய்ப்பு. அவனுக்கு ஒன்றும் அம்னீஷியாவோ அல்லது அல்சிமேர்(Alzheimer) நோயோ கிடையாது.  பின்ன என்னவென்றால் அவனுடைய சீட்டு கிழியும் வேலைப் பளுவினால் சொந்த பந்தங்களை கூட மறக்கக்கூடிய நிலை வந்ததை எண்ணி நொந்ததுதான்.

இன்னதுதான் வலை மென்பொருளாக தயாரிப்பது என்றில்லாமல் போய்விட்டது. சகலமும் "சமூக கட்டமைப்பு வலை"க்குள் (Social Networking WebSite) வந்துவிட்டது. நண்பர்கள் நாலு பேர் பிரிந்து போனால் கடிதம் எழுதி இந்த இடத்தில் இந்த தேதியில் சந்திக்கலாம் என்று ஒரு மாதமாய் திட்டமிட்டு கூடி பேசி மகிழ்ந்தது போய் "ஓர்குட்"(orkut) வந்தது. சரிப்பா இனிமேல் அம்மாபேட்டை அரசுவும் அமெரிக்கா கிருஷ்ணனும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பில் இருக்கலாம் என்றால் அதுவும் முடிந்த பாடில்லை இந்த ஒர்குட்டிற்கு போட்டியாக பந்தயத்திற்கு "முகப்புத்தகம்" (facebook) வந்தது. பதின்ம வயதுக்கு வந்தவர்களில் பதின்மூன்று வயதிலிருந்து ஒரு கணக்குத் துவங்கி தன்னுடைய சக ஆண் மற்றும் பெண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னோடு இணையத்தில் இணைத்துக் கொள்ளலாம்/கொல்லலாம். இனிமேல் நேருக்கு நேர் சந்தித்தால் தான் நண்பியின் நண்பியை நண்பியாக்கிக்கலாம் என்றில்லாமல், ரேகாவின் உயிர்த்தோழி காஞ்சனாவிற்கு கால் மணி நேரத்தில் கலாவும் தோழியாகலாம். அரட்டை மட்டும் அல்லாமல், மொட்டை மாடியில் துணி மற்றும் வடாம் காய போடும் போதும், இரண்டு நண்பிகளுடன் நடுவில் தலை நுழைத்து பெவிகுவிக் போட்டு கன்னங்கள் ஒட்டி இருந்தபோதும், போகும்போதும், வரும்போதும், மார்கெட்டிலும் இப்படி பல (அப)சந்தர்ப்பங்களில் எடுத்த புகைப்படங்களை நெட்டில் விட்டு எல்லோரையும் பயமுறத்தலாம்.
இதன் அடுத்த பரிமாண வளர்ச்சியாக வந்தது தான் "டுவீட்டு" (Tweets). அவசரகதியில் இயங்கும் உலகத்தில் பக்கம் பக்கமாக மெயில் அனுப்பியோ, ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓர்குட், முகப்புத்தகம் பார்த்தோ அளவலாவுவதை விடுத்து, அற்பசங்கையின் போது கூட இரு வாக்கியங்களில் 'நறுக்'கென்று 'அகர முதல எழுத்தெல்லாம்' எழுதியவன் போல் நம்மை பற்றி நாம் குறுஞ்செய்திகளை அனுப்ப, நம்மை தொடருபவர்கள் எவ்வித முயற்சியும் இன்றி நம்மை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் வரை பதியலாம். இந்த வலைமனையை www.twitter.com என்று உலாவியில் அமுக்கி தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோல் பல மென்பொருட்கள் வலையில் உலவுகின்றன. சரி, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். முரளியின் சொந்தபந்தங்களை தொடர்பிலும், நினைவிலும் வைப்பதற்கு தோதாக அதற்கும் ஒரு வலைமனை தொடங்கிவிட்டார்கள். அதன் பெயர் ஜீனி.காம் (www.geni.com). ஜீனீயாலாஜி என்ற கலைச்சொல்லின் வாமன வடிவம் தான் ஜீனி. அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மம்மாவின் அப்பா அம்மா, அப்பப்பா, அப்பப்பாவின் கொள்ளுத் தாத்தா, மாமியாரின் ஒர்ப்படியின் பெண் மற்றும் பையன் போன்று குடும்ப பந்துக்கள் அனைவரையும் ஒரே மரத்தின் கீழ் கொண்டுவரலாம். 'குடும்ப மரத்தை'  (Family Tree) பேணிப் பாதுகாப்பது மிகவும் சுலபம் கூட. இப்போது எல்லோருக்கும் ஈமெயில் உள்ளது. ஒவ்வொருவருடைய ஈமெயில் முகவரியை அவர்கள் பெயருக்கு நேர் பதிந்து வைத்துவிட்டோமேயானால் வாழ்த்து அட்டையோ, அழைப்பிதழோ அரிதாகிக்கொண்டே வரும் இக்காலத்தில், ஜீனி.காமில் சென்று "யப்பா எம்பெண்ணுக்குக்கு வர்ற பத்தாம் தேதி காலையில ஏழரை ஒம்போது ராகுகாலம் கழிஞ்சு ஆயுட்ஷேமம் வச்சிருக்கேன். அவசியம் எல்லோரும் தம்பதி குழந்தை குட்டி சகிதமா தி.நகர் அயோத்யா மண்டபத்துக்கு வந்துடுங்க" என்று ஒரு ஈமெயில் ஜீனி மூலமாக தட்டி விட்டால் ஒரே சமயத்தில் அனைவரையும் தண்டம் சமர்ப்பித்து அழைத்து விடலாம்.

எல்லாவற்றிக்கும் கணினியை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கிறோம். என் நண்பர் ரவியின் ஆரூடம் அடுத்த உலகப்போர் கணினி மூலமாகத்தான் நிகழும் என்று. நாஸாவின் டாட்டாபேஸ் இணையம் மூலமாக ஹாக் செய்யப்பட்டு அவர்களுடைய பல அறிய பெரிய முயற்ச்சிகளை  முறியடிக்கலாம். ரயில்வே மற்றும் பல பொதுத்துறை போக்குவரத்து சர்வர்களிடமிருந்து முன்பதிவு விவரங்களை அழித்து குழப்பம் விளைவிக்கலாம். இதுபோன்று பல நாச வேலைகள் நடக்கலாம். அதெல்லாம் அப்புறம், எண்ணற்ற பல வசதிகளால் கணினியிடம் ரொம்பவே அது சொல்வதற்கெல்லாம் வாலாட்டிகொன்டே இருந்துவிட்டு நாளைக்கு யாரேனும் "உங்க அம்மா பேரு கோமளா தானே ..." என்று கடைவீதியில் பார்த்து கேட்டால், "ஒரு  ரெண்டு நிமிஷம்  ஜீனி பார்த்து  சொல்றேன்...   " என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.

3 comments:

Madhavan Srinivasagopalan said...

...//"உங்க அம்மா பேரு கோமளா தானே ..." என்று கடைவீதியில் பார்த்து கேட்டால், "ஒரு ரெண்டு நிமிஷம் ஜீனி பார்த்து சொல்றேன்... " என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.//

nalla-Irukkuthu.

cheena (சீனா) said...

ஆகா - இவ்வளவு ஆர்ய்ச்சி பன்ணி அழகா நகைசுவையோட ஒரு இடுகை போட்டதுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - ஜீனி பக்கம் போய்ப் பாக்கறேன்

RVS said...

அன்னிக்கி கமெண்ட்டு போட்ட மாதவனுக்கு இன்னிக்கி நன்றி...
நன்றி சீனா சார்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails