Tuesday, February 23, 2010

நிக்க வேண்டிய இடத்தில நிக்கும்...

என் நண்பரின் மனைவி பரமசாது. இதுவரை ஒருமுறை கூட அவர் தூக்கி வீசிய கரண்டியாலோ, சப்பாத்தி கல்லாலோ என் நண்பருக்கு சிறு துளி ரத்தம் வரவில்லை என்றால் பாருங்களேன், அவ்வளவு சாது. ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிகிறார். எப்போதும் நண்பர் தான் மனைவிக்கு சாரதி. வீட்டில் இருந்து  கால் தரையில் படாமல் காரை வீட்டு வாசலில் வசதியாக நிறுத்தி ஏற்றிக்கொண்டு, வங்கியிலும் அதே போல் தரையிறக்கி விட்டுதான் அவருடைய அலுவலகம் செல்வார். வழக்கம் போல் நேற்றும் காலையில் ஏற்றி இறக்கி விட்டுத்தான் சென்றார். மதியம் இன்னொரு இடத்தில் நண்பரின் மனைவிக்கு ஒரு மீட்டிங் இருந்ததால் வழக்கமான மாலை பிக்அப் அவரது வங்கியில் இருந்து இல்லை. ஆகையால் பஸ் பிடித்து இருவருக்கும் ஒரு பொதுவான இடத்திற்கு வரச்சொன்னார் நண்பர். அங்கேதான் வந்தது வினை. "சைதாப்பேட்டை ஒன்னு" என்று கேட்டு பயணச்சீட்டு பெற்றிருக்கிறார். சீட்டு வாங்கிய பின் நடத்துனரிடம் "சைதாப்பேட்டையில எங்க நிக்கும்?" என்று ஒன்றும் அறியாமல் கேட்டவரை, "500 ரூபாய்க்கு பத்து பைசாவா சில்லரை இருக்கா?" என்று, ஒருவர் கால் மேல் இருவர் நிற்கும் பஸ்ஸில் கேட்டது போன்று வெகுண்டு நடத்துனர், "நிக்க வேண்டிய இடத்ல நிக்கும்" என்று கூறிவிட்டார்.

அதுமுதல் அம்மணி  பயணித்த மாநகர பேருந்து, மா'நரக' பேருந்தாயிற்று. ஒரே கோபம். பஸ்சை விட்டு இறங்கி அங்கே அரைமணியாய் தேவடு காத்திருந்த நண்பரின் காரில் ஏறின கையோடு சொன்னது "நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தினத்துக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டேன்". நண்பருக்கு ஆச்சர்யம் கலந்த சந்தேகம். பஸ் நிறுத்தியதற்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஏன் கோபமாக இருக்க வேண்டும் என்று. சிறிது நேரம் கழித்து தர்மபத்தினியின் சூடு ஆறியதும் கேட்டபோது கூறியவுடன் தான் இந்த தலைப்பு வார்த்தை சொன்ன நடத்துனரை 'கிண்டலாக' அவர் கேட்டது என்று புரிந்திருக்கிறது.

1. பீரோவிலிருந்த செல்லாத அரையணா பைசாவிலிருந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நகை முதல் நட்டு வரை ஒரு வீட்டில் திருட்டு போனபின், போலீசிடம்  தங்களுடைய  களவு போன பொருட்கள் எப்போது கிடைக்கும் என்று கேட்டால் , "கபாலியை பிடிக்கிறப்ப கிடைக்கும்" என்று ஏட்டு  பதில் சொன்னால்......

2. தன் வீட்டு வாசலில் யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு சுந்தரம் எறிந்த குப்பையையும் சேர்த்து பக்கெட்டில் எடுத்து போட்டுக்கொண்டு  நிற்கும் பாலு சாரிடம் 'நீல் மெட்டல் பனால்கா' ஆள்  "அப்டியே ஓரமா போடு சார் . எடுக்கும் போது எடுக்கலாம்"  என்றால்.....

3. மூன்று நாளாக குளிக்காமல், குடிக்காமல், கழுவாமல் இருக்கும் டி.வி.எஸ்ஸில் சதா நைட் ஷிப்டு வேலை பார்க்கும் ரத்தினத்திடம் கார்பொரேஷேன் ஊழியர் "மழை பெஞ்சா தண்ணி வருங்க" என்று பொன்மொழி உதிர்த்தால்....

4. பத்து இருபது கார்களில் தொண்டர்/குண்டர் படை புடை சூழ அவசர ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாமல்,  "அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனே", "தமிழுக்கு 'ழ' வே", "வாந்திக்கு உவ்வே வே", "பெண்களின் டி.வி சீரியலே" உங்களை வாழ்த்த வயதில்லை, வைவதர்க்கும்  முடியவில்லை என்று தலை(வர்)விகளுக்கு கோஷமிடும் கும்பலுக்காக எல்லோரையும் நிறுத்தி வைத்திருக்கும் போக்குவரத்திடம் "ஆபிஸ் போகணும், இன்னிக்கி ஆடிட். எப்ப விடுவீங்க..." என்று கேட்கும்போது  அவர் போகட்டும் விடுவேன் என்று அசால்ட்டாக சொன்னால்...

5. டெங்கு கொசுவின் கடியிலும், நல்ல குணவதியான பெண்சாதியின் கடியிலும், "ஆ...ஊ ..." என்று ராவேளையில் ஊளையிட்டு அழும் பிள்ளையின் ஆர்பாட்ட கடியிலும்  நொந்து நூலாகி, தொப்பலாய் நனைந்து, கசிந்து கண்ணீர் மல்கி, இரண்டு மூன்று மணி நேரமாய் போன மின்சாரம் எப்போது வரும் என்று விசாரிப்பதற்காக வாரியத்திற்கு போன் போட்டால், ஐந்து முறை அழைத்ததற்கு பிறகு பதமாய் எடுத்து, "பார்த்துகிட்டு இருக்கோம்... வரும் ...." என்று பாந்தமாய் பகர்ந்தால்...
 
6. காலை ஒன்பதரைக்கே சப் ரெஜிஸ்ட்ரார்  ஆபிஸ் அடைந்து, டாகுமென்ட் பெற்றுக் கொண்டு  ஆபிசுக்கு விடுப்பு எடுக்காமல், லேட் ஆக செல்லாமல்  'குட் மார்னிங்'  ஆபிசரிடம் திட்டு வாங்காமல் சென்று விடலாம் என்ற எண்ணத்தில்  அங்கே உடைந்த பெஞ்சில் ஒரு மணி நேரம் செலவிட்டபின், வெள்ளிக் கிழமை தலை குளித்து  வேனில் வருகிறவர்களின் ஒட்டு மொத்த குடும்ப விவகாரங்களை பேசி முடித்து வருபவரிடம் "அந்த ஒட்டியம்பாக்கம் டாகுமென்ட்..." என்று இழுத்து கேட்டால் "இப்ப தானே வந்திருக்கோம்.... தர்ர்ரோம்....." என்று வெடுக்கென்றால்......

ஒன்று, இரண்டு என்று மேற்கண்ட பட்டியலில் உள்ளது  போல  பல "ஆல்...." களை இந்த பரமசாது சந்திக்க நேரிட்டால் எவ்வளவு பேருக்கு அதற்கேற்றார்போல் "தாங்க்ஸ்" சொல்வார் என்று எண்ணிப்பார்த்துக் கொண்டேன்.

3 comments:

ஸ்ரீராம். said...

ஆரம்ப வரிகளின் நாய்ச் சுவையை ரசித்தேன்...
ஊர் செல்லவிருந்த மனைவி குழந்தைகளை ஏற்றிவிட்ட பஸ்சின் டிரைவர் இடம் காலை பஸ் எப்போது ஊர் சென்று சேரும் என்று கேட்டது தப்பு, அபசகுனம் என்று கூறி பஸ்ஸை நிறுத்தி, என்னை அர்ச்சனை செய்தவாறே தண்ணீர் குடித்து பரிகார நிவர்த்தி செய்து பச்சைக் கிளப்பிய சம்பவம் நினைவுக்கு வருகிறது..

ஸ்ரீராம். said...

"நாய்ச்"

"பச்சைக்"

சோதனை செய்யாமல் அவசரத்தில் பதிலிட்டு விட்டேன். மேலே உள்ள இரண்டு வார்த்தைகளும் பிழையாக அடித்துள்ளேன் என்று தெரிகிறது. மன்னிக்கவும். நகைச் சுவையாக..என்று சொல்ல வந்தது நாய்ச் சுவையாக என்று வந்துள்ளது. பஸ்ஸை என்பது பச்சை என்று வந்துள்ளது..மன்னிக்கவும்.

Senthil Kumar said...

உண்மையில் இது உங்கள் நண்பரின் கதையா அல்லது ..!!! ?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails